எண்ணங்களின் எதார்த்தங்கள்..!

Originally posted 2017-10-22 13:59:26.

 

எண்ணங்களே எம் வாழ்வை புடம் போடும் ஊக்கிகள்.

எண்ணங்களே எம் வாழ்வை புடம் போடும் ஊக்கிகள்.

ண்ணங்களே எம் வாழ்வை புடம் போடும் ஊக்கிகள்.அவை பல்வேறு நிலைமைகளில் எம் செயல்பாடுகளின் காரணிகளாக அமைகின்றன.பெரும்பாலான வேளைகளில் எம் செயல்பாடுகளின் திறன் அதன் ஆழ்ந்த அம்சங்களை சார்ந்தே அமைகின்றது.

காலந்தான் எத்துணை வேகமாக உருண்டோடுகின்றது..! அதன் வேகம் புதிய போட்டிகளையும்.., உந்துதல்களையும்.., கண்டுபிடிப்புக்களையும்.., ஊக்குவித்துத் தருகின்றது. இன்றைய செய்திகள்.., நாளைய வரலாறுகள்..! வரலாறுகள்.., பதிவேடுகள்..!
பதிவேடுகள் எம்மைப் பதிக்கச் செய்யும் சுவடுகள்..! அந்த சுவடுகளின் தடங்களாய் வசந்தம் தன்னை புதிய வகையில் வார்த்தெடுக்க துவங்கியிருக்கின்றது ஏகஇறைக்கு நன்றி சமர்ப்பித்து..!
மனிதர்கள்தான் எத்தனை வகை..?
அவர்களின் எண்ணங்கள்தான் எத்துணை அழகிய கலை..!
அத்தகைய எண்ணங்கள் நம் வாழ்வியல் வண்ணங்களாய் வெளிப்படுகின்றன. எண்ணங்களை அறிந்தவர் இரண்டே பேர்..!
ஒருவர் அந்த எண்ணத்துக்குரிய நபர்!
மற்றொருவன் எண்ணங்கள் அனைத்தின் சூத்ரதாரியான ஏகஇறைவன்!அதனால்தான் இதயங்களின் இரகசியங்களை அறிந்தவன் என அவனது இணையற்ற வலிமையை போற்றுகின்றோம்.
எண்ணங்களை இரகசியமாக வைத்துக் கொள்ளலாம் என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள்.அது எப்போதும் உண்மையல்ல..!
எண்ணத்தை யாரும் எப்போதும் மறைக்க முடியாது.ஏனெனில் எண்ணம்

பழக்கமாகவும் பின் சூழ்நிலையாகவும் வெளிப்படுகின்றது என்கின்றான் தத்துவ ஞானியான ஜேம்ஸ் ஆலன் என்பார்.

எனவே, வலிமையான எண்ணங்கள் இருப்பின் அந்த எண்ணங்கள் நயவஞ்சகமற்ற பழக்கங்களைத் தரக்கூடியவை எனில்.., அவை தெளிவான எண்ணங்களாக அமையும்.அந்தத் தெளிவு பெற.., எண்ணங்களின் பிறப்பிடமான மனம் உறுதி கொண்டதாய் இருத்தல் அவசியம்.
ஆனால்.., இன்றைய உலகின் நிலை என்ன..?
ஊரை அடித்து உலையில் போட்டு ஊர்ப் பெரியவராய் வலம் வரும் நயவஞ்சகர்கள்.! தன்னை உலையில் அடித்துப் போட்டாலும் ஊருக்காக உழைக்கும் உன்னதவான்கள்.பிழைக்க வழிகள் பல இருந்தும் நாணயங்களுக்காக நாணயத்தை அடகு வைக்கும் நாசகாரர்கள்..! நாணயத்துக்காக நாணயங்களை இழக்கும் நல்லவர்கள்.இயலாதவர்களின் இயலாமைகளை தங்கள் பிழைத்தலுக்கு இரையாக்கிக் கொள்ளும் கழுகுகள்!உழைத்தும் பிழைக்கத் தெரியாமல் உலுத்தர்களுக்கு தம் உழைப்பை இரையாக்கி களைத்துப் போகும் எளியவர்கள்..!பிறர் வெற்றி கண்டு தான் புளங்காகிதம் காணும் பெருமைக்குரியவர்கள்..! மாற்றான் வெற்றியால் மனம் புழுகி பொறாமைத் தீயில் வெந்து பழிவாங்கும் பராரிகள்..!கள்ளங்கபடமின்றி வெள்ளந்தியாய் பழகி எல்லாரிடமும் ஏளனப்படும் இளிச்சவாயர்கள்..! முன்னே இளித்து.., பின்னே புதைக்கும் போக்கற்றவர்கள்..! முரணே வாழ்வாய் முழங்கும் முச்சந்தியாளர்கள்.,! முன்னும் பின்னும் முரணில்லாது பழகி பகையையே சம்பாதிக்கும் அப்பாவிகள்!
ஆம்! அனைத்தின் பின்னணியும் எண்ணங்கள்தான்!
தாக்குவது-தாக்கப்படுவது,துரத்துவது-துரத்தப்படுவது,பிடிப்பது-பிடிபடுவது,அனுபவிப்பது-அனுபவிக்கப்படுவது,அலையச் செய்வது-அலைக்கழிக்கப்படுவது! இவ்வாறு இருவேறு ஆளுமை நிலைகளில் ஒவ்வொருவரும் வலம் வருகின்றோமே தவிர, நாம் சிந்தித்து நம் எண்ணங்களை சரியான பாதையில் நிலைநிறுத்துவதில் அவ்வப்போது தவறிவிடுகின்றோம்.
மேலே, மேதையான ஜேம்ஸ் ஆலன் கூறியதை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே படிக்காத மேதையாய் இறையருளால் உலகை உய்விக்க வந்த நம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான்……’ என்று பொட்டில் அடித்தாற்போல் கூறியுள்ளார்.அறிவிப்பாளர்: உமர் (ரலி) ஆதாரம்:புகாரி,முஸ்லிம் (புனித நாற்பது நபிமொழி:இமாம் அந்-நவவீ)
எனவே, இனி பிற மனிதனுக்கு நம் உள்ளத்தை பரிசளித்தால்.., தன்னம்பிக்கை உனக்கே பரிசளிக்கும்!கழிந்துபோன நினைவுகள்.., எழுதப்படாத நாட்குறிப்புக்களாய் போகட்டும்.கையளவே தன்னம்பிக்கை என்றாலும் தளராமல்.., கடலளவு நிராசைகள் கடந்தாலும் கலங்காமல்.., கவிஞர் விஜய் வரிகளில் சொல்லப் போனால்.., வாழ்க்கை கவிதை வாசித்து..,வானம் அளவு யோசித்து.., முயற்சி ஒன்றை மட்டுமே மூச்சு போல சுவாசித்து முன்னேறுவோம்..!ஆனால், ஒரே நிபந்தனையாய்…., இறையச்சத்தின் ஒளியில்.., அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை சரிதை நிழலில்..! இத்தகையதொரு பாதையில் பயணம் தூரம்தான்..!ஆனால் இலட்சியம் உயர்ந்தது.இந்த சத்தியப்பாதையில் இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் வசந்தம்.., காலத்தின் வளர்ச்சிக்கேற்ப.., இணையதளம், வலைப்பூ, மின்னஞ்சல், ஃபேஸ்புக்,ட்விட்டர்,யூடியூப் என வசதிகளை வாய்ப்புக்களாக்கி உங்களுடன் உறவாடும்..! புதிய வடிவில், புதுப்பொலிவுடன் உங்களை அடைந்திருக்கும் எம் வசந்த தாரகையை அழகிய உள்ளங்களுடன் கரம் கோர்க்கச் செய்யுங்கள்.நிறைகளை நிலைப்படுத்துங்கள்,குறைகளை மன்னித்து சுட்டிக் காட்டுங்கள்.. தூய எண்ணங்களுடன்..!அதற்கு இறையருள் துணை நிற்கட்டும்!

Related Post