- – வீ.அரசு
இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர்
‘பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார்,
மூத்தார், இளையார், பசு, பெண்டிர், என்று இவர்கட்கு
ஆற்ற வழிவிலங்கி னாரே – பிறப்பினுள்
போற்றி எனப்படு வார்’ (ஆசாரக்கோவை.64)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை, பார்ப்பாருக்குக் கொடுக்கும் தகுதியை மேற்குறித்த பாடல் மூலம் அறிகிறோம். ‘ஆசாரம்’ என்பதற்கு ‘சாஸ்திர முறைப்படி ஒழுகை’ என்று பொருள் கூறுகிறது தமிழ் லெக்சிகன் (1:210). தமிழில் உருவான ஆசாரக்கோவை குறித்த பின்வரும் செய்தி கவனத்திற் குரியது.
“தி.செல்வகேசவராய முதலியார் தமது ஆசாரக் கோவைப் பதிப்பின் முகவுரையில், ‘இந்நூலிற் கூறிய ஆசாரங்கள் பெரும்பான்மையாய் வட மொழியிலுள்ள சுக்ரஸ்மிருதியிலிருந்து தொகுத் தவை என வடநூற் புலவர் கூறுகின்றனர்’ என்று குறித்துள்ளார். பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை தாம் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றில், ஆபஸ்தம்ப கிருஹ்ய சூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயன தர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், வசிஷ்ட தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, உசனஸ ஸம்ஹிதா, ஸங்க ஸ்மிருதி, லகுஹாரித ஸ்மிருதி ஆகியவை எல்லாம் இந்நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளது என்கிறார்” (பதினெண்கீழ்க்கணக்கு: மர்ரேபதிப்பு: ஆசாரக் கோவை முன்னுரை: இரண்டாம் பதிப்பு: 1981)
மேற்குறித்த செய்திகள் ஆசாரம் என்பது முற்று முழுதான மநுநீதியை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறியமுடிகிறது. தமிழில் உருவான செந் நெறி மரபில் அமைந்த, சமயச்சார்பற்ற இயற்கை நெறி மரபுக்கு முற்றிலும் வேறானது ஆசாரம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. இம்மரபே பின்னர் இந்துமத ஆசாரங்களாகக் கருதப்படுகின்றன. இவை அடிப் படையில் வருணாசிரம தர்மத்தை நியாயப்படுத்துபவை. சாதி நியாயங்களைப் பேசுபவை. பெண்ணை அடிமை களாகக் கட்டமைப்பவை. இந்த ஆசாரங்களுக்கு எதிரான குரலாக, அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் அவர்களின் (1800-1897) Ôஇந்துமத ஆசார ஆபாச தரிசினி’ (1882) என்னும் ஆக்கம் அமைகிறது. தமிழ்ச் சூழலில் உருவான சுயமரியாதை இயக்க மரபுக்கு இந்நூல் முன்னோடியாக அமைகிறது. இதற்குமுன் தமிழர்தம் சுயமரியாதை குறித்து இந்தக் கண்ணோட்டத்தில் பேசியதற்கான ஏதுக்கள் இருந்ததாக அறியமுடிய வில்லை. இவ்வகையில், தமிழ்ச் சமூக வரலாற்றில் இந்த ஆக்கத்தை ஒரு திருப்பு முனையாகக் கொள்வதற்கு இடமிருக்கிறது. இந்த ஆக்கத்தின் தன்மைகளைப் புரிந்து கொள்ளக் கீழ்வரும் வகையில் தொகுத்துக்கொள்ள இயலும்.
-
தமிழ்ச்சூழலில், பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய நான்கு – ஐந்தாம் நூற்றாண்டுகளில் உருவான வைதீக மரபு செல்வாக்கு செலுத்தியது. மநு கூறும் ‘தர்மங்களைப்’ புனிதமாகக் கருதி ஏற்றிப் போற்றினர். அவை சைவ – வைணவ மரபுகளாகவும் இருந்தன. இவ்வகையான மநுதருமத்தை, அதன் ஆபாசத்தைத் தரிசிக்கும் வாய்ப்பை அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் தான் உருவாக்கித் தந்துள்ளார். ‘ஆபாசத்தைத் தரிசித்தல்’ என்னும் அவரது சொல்லாட்சி மிகுந்த ஆழமான பொருள் பொதிந்தது. இந்து மதமென்னும் அதிகார நிறுவனத்தை, ‘ஆபாசம்’ என்று வரையறைப்படுத்திய அவரது கண் ணோட்டங்களைப் புரிந்துகொள்வது இந்த ஆக்கத்தின் மூலம் சாத்தியமாகிறது.
-
‘வரலாற்றில் பெண் அடிமையாக்கப்பட்டது’ குறித்து அறியமுடிகிறது. ஆனால் வருணாசிரம மநுதர்மங்கள் பெண்ணைக் கொச்சைப்படுத்திய வரலாறு மிகக் கொடூரமானது. இக்கொடுமையின் பல்வேறு பரிமாணங்களை ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி’ விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம்.
-
மனித வாழ்க்கை, பிறப்பு – இறப்பு என்னும் வட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. பிறந்தது முதல் இறந்த பின்னும் பல்வேறு ஆசாரங்களைப் பின்பற்ற இந்துமதம் கட்டளையிடுகிறது. இவ்வகையான ஆசாரங்கள், வடமொழி மரபில் இருந்து உள்வாங்கப்பட்டு, அதனை நிகழ்த்துபவர்களாகப் பார்ப்பனர்கள் அமைகிறார்கள். இவ்வகையான நிகழ்த்துதலை அடிப்படையாகக் கொண்டு, ஏழை மக்களிடம் பார்ப்பனர் பெறும் ‘தர்மங்கள்’, அடிப்படையில் பகற்கொள்ளையாகும். இவ்வகையான சுரண்டல்கள் குறித்து இந்நூல் விரித்துப் பேசுவதைக் காணமுடிகிறது. இவை நேரடி அநுபவப் பதிவுகள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. மோட்சமடைதல் என்னும் மோசடியால் இவ்வகையான ‘தர்மங்கள்’ என்னும் ஏமாற்று அரங்கேற்றப்படுவதன் பல்வேறு விவரங்களை இந்நூல்வழி அறிகிறோம்.
-
வைதீக மரபு என்பது புராணக்கதைகளால் கட்டப்பட்ட மரபு. இக்கதைகள் அடிப் படையில் ஆபாசமானவை. தொன்ம மரபு சார்ந்த தர்க்கமில்லாத, வெறும் பொய்கள் மநுதர்மத்தைக் கட்டிக்காப்பதற்குப் புனையப் பட்டவை. இவை பெரும் கோயில்களாகவும் இலக்கியங்களாகவும் நம்மிடையே இன்றும் வலுவாக இருந்து வருபவை. இப்புராணங்கள் மனிதனின் அடிப்படை அறிவுக்கு எதிரானவை. சிந்திக்கும் மரபை அழிப்பவை. குழந்தைகளின் உள்ளங்களில் நஞ்சூட்டுபவை. வைதிக – பார்ப்பனியப் புரட்டர்கள் இதன்மூலம் பிழைப்பு நடத்த உதவுபவை. இத்தன்மைகளை எல்லாம் ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி’ மிக விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண முடிகிறது.
-
விதி, மோட்சம், சோதிடம், மந்திரங்கள், சகுனங்கள் எனப் பல்வேறு மூட நம்பிக்கைகளை வைதீகம் உருவாக்கிப் பரவலாக்கியுள்ளது. இம்மூட நம்பிக்கைகள் சார்ந்த சடங்குகளால்தான் பார்ப்பனியம் செழிக்கிறது. பார்ப்பனியம் அடி மட்டம் வரை சென்று ‘பூசாரிகள்’ என்னும் ஏமாற்றுப் பேர்வழிகள் உருவாகிறார்கள். சாமி யார்கள் என்னும் மேல்மட்டக் கொள்ளைக் கூட்டம் உருவாகியுள்ளது. இவர்களுக்கும் எவ்விதமான அரசியல் புரிதலும் இல்லாமல் கட்சி என்னும் பெயரால் பிழைப்பு நடத்துபவர் களுக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். இத்தன்மைகளை இந்த ஆக்கம் கிழித்துப்போட்டு அம்பலப்படுத்துகிறது.
-
அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் வாழ்ந்த சமகாலத்தில் நிகழ்ந்த மதப்பரப்புரை நிகழ்வுகள் மிகவிரிவானவை. மதச் சீர்திருத்தங்கள் பேசப் பட்ட காலம். புதிய மதங்கள் உருவான காலம். மதக்கருத்தாடலைப் புறம் காணும் புலமை யாளர்கள் எவரும் இல்லாத காலம். இந்தச் சூழலில் இவரது பாதை தனிப்பாதையாக அமைந்துள்ளது. இத்தன்மையை அவர் உள் வாங்குவதற்கு உந்தித் தள்ளியவை எவை? என்றும் அறிய வேண்டும். இவரை எதிர்த்தவர்கள் யார்? இவரை அரவணைத்துச் சென்றவர்கள் யார்? என்பதான பல்வேறு விவரணங்கள், ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினியைப்’ புரிந்து கொள்ள உதவக்கூடும்.
மேலே குறிப்பிட்ட பல்வேறு தன்மைகளையும் ‘இந்து மத ஆசார ஆபாச தரிசினி’ மூலம் எவ்வாறெல்லாம் தரிசிக்க முடிகிறது என்பதைக் கீழ்க்காணும் பகுதியில் உரையாடலுக்கு உட்படுத்துவோம். இக்கருத்துக்களைப் பரப்புரை செய்யும் கடமை நம்முன் உள்ளது.
“இந்த நூல் இயற்றுதற்கே ஏதுதான் என்னவென்றால்
முந்திய காலந் தன்னின் மூடராய் இருந்துள்ளோரைச்
சிந்தையிற் கபடம் வைத்துச்
சேர்ந்திரு சாதியோர்கள்
வந்திடுங் காலமெல்லாம் வஞ்சித்த
வழியைக் காட்ட” (750)
அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலானார் (இனி அ.வெ.) ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி’யை உருவாக்கியதற்கான காரணத்தை மேலே கண்டவாறு பதிவு செய்துள்ளார். ஒன்றுமறியாத அப்பாவி மக்களை இரு ஆதிக்க சாதிக் காரர்கள் (பார்ப்பனர் மற்றும் வெள்ளாளர்) எவ்வா றெல்லாம் வஞ்சித்தார்கள். இனிமேலும் அது தொடரக் கூடாது என்பதற்காக இந்நூலை எழுதியுள்ளார். இத்தன்மை குறித்து ‘பாயக்காரிகளுக்கும் மிராசுதார்களுக்கும் உண்டாகியிருக்கிற விவாதம்’ (1872) என்னும் ஆவணத்தில் அவர் பதிவு செய்துள்ள கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது. ‘மிராசு உரிமை’ என்பது ஆதிக்க சாதியினர் கண்டுபிடித்த சுரண்டல் வடிவம் என்பதை அ.வெ. தெளிவாகவே பதிவு செய்துள்ளார்.
வலங்கை கக்ஷிக்காரர்களான வெள்ளாளர், அகமுடியர், கவரை இவர்களும் உத்தியோகத்தி லேறி அனுக்கூல சத்துராதிகளான பார்ப்பாருடன் கூடிக் கொண்டு இந்தச் சாதியாரை மிருக வேட்டையாடி கஷ்டார்த்தத்தையும் மானாபி மானத்தையும் சர்க்கார் வரும்படியையும் நீதியையும் ஒரு கக்ஷியாயிருந்து கொள்ளையடிக்கிறதைக் குறித்தும் அனுதாபம் உண்டாகி இந்த தேசத்தில் செய்கிற தர்மங்கள் அனேகமாயிருந்தாலும் அந்தத் தர்மங்களெல்லாம் பார்ப்பார் தங்கள் வமிசத்தாரே செல்வ சீவனம் பண்ண கட்டுப்பாடான மாய தந்திர சாஸ்திரங்களை உண்டாக்கிக் கொள்ளையடிக்கச் செய்திருக்கிற தர்மங்களென்று அவைகளையெல்லாம் வெறுத்து முக்கிய தர்மமான கல்விச்சாலை – வைத்திய சாலை- ஆருமற்ற மொண்டி – முடம் -கூன் – குருடு – விருத்தாப்பியர் – வியாதியஸ்தர்களுக்குக் கஞ்சித்தொட்டி இந்த மூன்று தர்மமு முக்கியப் பட்டதாயிருந்தாலும் அதை மேலான அறிவுள்ள கவர்ன்மெண்டார் செய்தாலும் அதில் இந்தச் சாதியார் வாசிக்கப் பிறரிடம் கொடாமல் எல்லாவற்றையும் இழந்து போனபடியினாலே கல்விச் சாலைகளை வைத்து இந்தச் சாதிப் பிள்ளைகளை வாசிக்கச் செய்து மேன்பாட்டுக்குக் கொண்டு வரலாமென்றால் அவ்வளவு திரவியம் என்னிடத்திலில்லை.
இதைக் குறித்து நான் ஏக கர்த்தாவினிடத்தில் முறையிட்டேன் – 1858 ஆம் வருஷத்தில் நம்முடைய அரசி ராணி விக்டோரி யம்மாள் அவர்கள் இந்த இந்து தேசமெல்லாம் பாடசாலை வைத்து ஏழைப்பிள்ளைகளை வாசிக்கச் செய்கிறதென்று அனுப்பின உத்திரவை மாற்றி இந்தப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் சொல்கிறபடி முக்கியமாய் நம்முடைய சாதி பிள்ளைகளுக்கு உதவவொட்டாமல் செய்து பார்ப்பார் முதலானவர்கள் தங்கள் பிள்ளை களையே வாசிக்கச் செய்துகொண்டார்கள்.
அதைப் பற்றி நான் என்ன முயற்சி பண்ணியும் அப்போது நடவாமல் இப்போது கர்த்தாவுக்குத் தயவு பிறந்து மின்ஸ்பால் கமிசனரவர்களால் கிராமங்கள் தோறும் பாடசாலை ஏற்படுத்தி ஏழைப்பிள்ளைகளும் வாசிக்க உத்தரவாகி முயற்சி நடக்கிறது. (பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாகியிருக்கிற விவாதம்’, ப.?)
மேற்குறித்த செய்தி மூலம் வெள்ளாளர், பார்ப்பனர் என்னும் ஆதிக்க சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதியினரை எப்படிச் சுரண்டினார்கள் என்பதைக் காணமுடிகிறது. அ.வெ. அவர்கள் வன்னியர்களை முதன்மைப்படுத்திக் கூறினாலும், இத்தன்மை பிற ஒடுக்கப்பட்ட சாதி யினருக்கும் நிகழ்ந்த கொடுமை என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
(பார்க்க: இந்நூலில் உள்ள கட்டுரை: தொண்டை மண்டல சாதி – நில உறவுகள்) வருணா சிரமம் கட்டமைத்த சாதிய நியாயங்கள் என்பவை, ஆதிக்க சாதியினர் – ஒடுக்கப்பட்ட சாதியினர் என்னும் சமூக நடைமுறைக்கு வழிகண்டது. வருணாசிரமப் படிநிலையில் தங்களைச் சூத்திரர்களாக வெள்ளாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. கூடலூர் கனகசபைப்பிள்ளை என்னும் வெள்ளாளர் எழுதிய ‘வருணசிந்தாமணி’ என்னும் நூலுக்கு, சிதம்பரத்தில் உள்ள பார்ப்பனர்கள் வழங்கிய அங்கீகாரப் பத்திரம் பின்வருமாறு அமைகிறது.