ஆசாரம் – ஆபாசம்..! – 2

Originally posted 2018-06-26 21:30:37.

– வீ.அரசு

இந்துத்துவம் இறைவன் குறித்த பல்வேறு

இந்துத்துவம் இறைவன் குறித்த பல்வேறு

ந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர்

இந்தியாவினுள் விந்தகிரிக்கு வடபாலுள்ளவர்கள் ஆரியர்களென்றும், தென்பாலுள்ளவர்கள் திராவிடர்களென்றும், பூர்வமாக ஏற்பட்டிருக்கிற தென்பதும், அவ்வாரியர்களுள் ஏற்பட்ட பிர்ம க்ஷத்திரிய வைசிய சூத்திரர் என்னும் நான்கு வர்ணங்களும் திராவிடர்களுக்கும் உள்ளவென் பதும்; அவை முறையே ஆதி சைவர்கள், மூவேந்தர்கள், வேளாளர்கள், தொழிலாளிகள் என்பதும், ஸ்ரீ மாந்-கூடலூர் கனகசபைப்பிள்ளை யவர்களாலியற்றப்பட்ட வருணசிந்தாமணி என்னும் நூலால் வெள்ளிடை மலைபோல விளங்குகின்றன. இது வேதாகம சாஸ்திர சம்மதமா யிருத்தலின் எங்களுக்கும் உடன்பாடேயாம். (வருணசிந்தாமணி: இரண்டாம் காண்டம்: சாற்றுக்கவி பகுதி, இரண்டாம் பதிப்பு:1925)

தில்லை மூவாயிரவர்கள் கொடுத்த இந்த அங்கீகாரம் தென்பகுதியின் ஆதிக்க சாதித் தலைமை வெள்ளாளர், வடபகுதியின் தலைமை பார்ப்பனர்கள் என்ற புரிதலைத் தருகிறது. இவ்விரு பகுதியினருக்கு எதிராகவே தமது கலகக் குரலை எழுப்பி, அதற்காக இந்த ஆக்கத்தைச் செய்ததாக அ.வெ.கூறுவதை நாம் புரிந்துகொள்வது அவசியம். ஆசாரம் சார்ந்த சடங்குச் சுரண்டலில் முதன்மையாகப் பார்ப்பனர்களும் நிலங்களைப் பறிப்பதில் முதன்மை இடத்தில் வெள¢ளாளர்களும் செயல்பட்ட கொடுமைகளை அ.வெ. அவர்கள் அம்பலப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். பத்தொன் பதாம் நூற்றாண்டில் முன்னெடுத்த அவரது கலகம், பின்னர் பெரும்மாற்றங்களைத் தமிழ்ச்சமூகத்தில் உள்வாங்க, முன்னோடும் பிள்ளையாக இருந்துள்ளது. இத்தன்மையை இன்றைய மாற்றங்களோடு புரிந்துகொள்ளும் தேவை நம்முன் உள்ளது.

மேற்குறித்த ஆதிக்க சாதியினர்தான் இந்துமதம் கட்டமைத்த ஆசாரங்களை ஏற்றிப் போற்றியவர்கள். மநுவின் குழந்தைகளாகத் தங்களைக் கற்பித்துக் கொண்டவர்கள். மொழி, வட்டார வேறுபாடுகள் இருந்தாலும் வைதீக மரபில் ஒரே கருத்துநிலையில் செயல்பட்டவர்கள். இவர்கள் மநுவை அடிப்படை யாகக் கொண்டு உருவாக்கியதே ‘இந்துமதம்’ என்னும் ஆபாச ஆசாரங்களைக் கொண்ட நிறுவனம். இந் நிறுவனத்தைத் தோலுரிப்பது என்பது, ஆதிக்க சாதியைத் தோலுரிப்பது என்னும் தெளிவான புரிதலை அ.வெ.அவர்கள் கொண்டிருப்பதை அவரது ஆக்கம் உறுதிப்படுத்துகிறது.

“பூண நூலெனத் தரித்துப் புரண்டிடத்

    தோளில் மார்பில்

காணவே மந்திரஞ் சொல்லிக்

  காலை மாலையிற் செபித்திது.. (265)

“ஓங்கிய தேவபாடை ஒன்றும் எப்போதும் போதும்

வீங்கிய தமிழையெங்கும்

   விளங்கிடக் கூடாதென்றார் (551)

என்னும் பதிவுகள் ஆதிக்க சாதியினர் குறித்த அ.வெ.அவர்களின் புரிதலாக இருப்பதைக் காண்கிறோம். நான்கு சாதிகுறித்த பதிவைப் பின்வரும் வகையில் செய்துள்ளார்.

“அரசரும் பார்ப்பார் ஒன்றாய்

   அகத்தில் வஞ்சகத்தார் கஞ்சன்

சிரம் புசந்தோள் பாதத்திற் செனித்தார்

   நாற்சாதி யென்ன

பிரம க்ஷத்திரிய வைசிய பேதமாஞ் சூத்திரர்க்கு

வரும்பெரு தொழிலிஃதென்னா

   வகுத்தனர் சொல்லக் கேண்மின் “(224)

என்றும்,

“சூத்திரன் என்போன் முன்னர்

   சொன்னதோர் மூவருக்கும்

பாத்திரமாக நின்று பலவேலை முழுதுஞ்செய்து

சாத்திரம் வேதங் கல்வி சார்ந்திடும் உபதேசங்கள்

பார்த்திடப் படிக்கக் கேட்கப்படாதவர்

  என்று வைத்தார்” (227)

என்றும் அ.வெ. அவர்கள் செய்துள்ள பதிவு நால் வருணக் கொடுமை குறித்த பதிவாக உள்ளது. நால் வருணத்தைக் கொண்டாடியவர்கள் வாழ்ந்த சூழலில் அதற்கெதிரான இவரது குரல், வரலாற்றில் பரவலாக அறியப்படாமல் போனதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

•••

ஒரு கணவன் இறந்தவுடன் அவனது மனைவியும் இறப்பிற்கு உட்படுத்தப்பட்டவள் போல் துன்பப் பட நேரிடுகிறது. அவளுடைய உறவினர்கள் யாரும் அவளை அணுக முடியாது. மூன்றிலிருந்து ஆறு பெண்கள் (நாவிதர்களின் மனைவிகள், இதற்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிரிவினைச் சேர்ந்தவர்கள்) மட்டுமே இவர்களுடன் இருக்கிறார்கள். கணவன் உயிர் நீங்கியதும் இவர்கள் உடனடியாகச் சென்று அவளது அணிகலன்களைக் களைகிறார்கள். காதிலும் மூக்கிலும் அணிந்திருக்கும் அணி கலன்கள் அகற்றப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் இவர்களது இந்தச் செயல் காயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தலையில் அணிந் திருப்பவை கிழித்து எடுக்கப்படுகின்றன. கைகளில் அணிந்திருக்கும் வெள்ளி மற்றும் பவுன் வளையல்கள், காப்புகள் ஒவ்வொன்றாகக் கழற்றப்படாமல், கைகள் தரையில் வைக்கப்பட்டு ஒரு கல்லினால் அடித்து உடைக்கப்படுகின்றன. அவர்கள் இவ்வாறு செய்யும் போது காயங்களை ஏற்படுத்துவது குறித்துக் கவலை கொள்வதில்லை. விதைவையானவள் ஆறு அல்லது ஏழு வயதுக் குழந்தையாக இருந்தால்கூட இரக்கப்பட மாட்டார்கள். (டபிள்யூ.ஜே,வில்கின்ஸ் (மொ.பெ) ப.சரவணன்: நவீன இந்துத்துவம்:2009:190)

டபிள்யூ.ஜே.வில்கின்ஸ் 1878இல் எழுதியவை மேலே கண்டவை. “இந்துமத ஆசாரங்கள்” என்ற பெயரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், உலகத்தில் எங்கும் நிகழாதவை. குழந்தை மணம், விதவை மறுமண மறுப்பு, விதவை வாழ்க்கை முறை ஆகியவை இந்துமதம் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளுள் தலையாயது. இதன் உச்ச கட்டமாகவே உடன் கட்டை ஏறல் நடைபெற்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இக்கொடுமை களுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்தனர். இராஜாராம் மோகன்ராய் (1772-1832) முதல் ஜோதிராவ் பூலே (1827-1890) வரை இக் கொடுமை களுக்கு எதிராகப் போராடினார்கள். இந்திய தேசியத்தைக் கட்டமைக்க விரும்பிய பிற்கால காங்கிரஸ்காரர்களும் இதில் அக்கறை செலுத்தினர். இவர்கள் அனைவரும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த அளவிற்கு, அதற்கு மூலமாக அமைந்த இந்துமத ஆசாரங்களை அம்பலப்படுத்தினார்களா? என்ற கேள்வி முக்கியமானது. மதத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்று பேசினார்கள். மதமே கொடுமைகளுக்கு மூலம்; அதனை அழிக்க வேண்டும் என்ற சிந்தனை தமிழகச் சூழலில் மட்டும்தான் உருவானது. இதில் சென்னை இலௌகிக சங்கத்திற்கு (1878-1888) முதன்மையான இடமுண்டு. இச்சங்கம் செயல்பட்ட காலங்களில் வாழ்ந்தவரும், அவ்வமைப்பில் இருந்த பலரை அறிந்தவருமான அ.வெ.அவர்கள், இந்துமதம், பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை தமது “இந்துமத ஆசார ஆபாச தரிசினி” ஆக்கத்தின் மூலம் தோலுரித்தார்.

முன்னாளில் வயது வந்த மொய்குழல்

     மணத்தைச் செய்து

பின்னாளிற் கலன் இழந்த பெண்கட்கு மறுமணத்தை

எந்நாளுஞ் செய்து வாழ்ந்தே

   இருந்தனர் குறைவில்லாமல்

பின்னாளுங் கெடுக்க நின்ற

   பார்ப்பார் தங்குலத்தோர் பெண்ணே” (516)

என்பதின் மூலம், மறுமணத்தை முதன்முதல் தவிர்த்த வர்கள், இந்துமத ஆசாரத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு கொண்ட பார்ப்பனர்கள்தாம் என்பதைக் காட்டுகிறார். இவர்களைப் பின்பற்றி பின்னர் பல்வேறு சாதிகளும் விதவை மணத்தைத் தவிர்த்துவிட்டனர் என்று விரிவாக இந்நூல் பேசுகிறது.

“பெண்களுக்குப் பேய் பிடித்துவிட்டது” என்ற மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து “இந்துமத ஆபாச தரிசினி” விரிவாகப் பேசுகிறது. பெண்கள் இவ்வித மன நிலைக்கு ஆளாவதற்குக் காரணம், அவர்களது உழைப்பு சார்ந்து உடலில் ஏற்படும் பித்தமே காரணம் என்றும் இந்நூல் கூறுகிறது. மதக் கொடுமைகளிலிருந்து பெண்ணைக் காப்பாற்றுவதற்கு அ.வெ.அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனம் விதந்து பேச வேண்டிய ஒன்றாகும். பெண்கள் நகை அணிவதால் நேரிடும் கேடுகள் குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. (செய்யுள்கள்.663-669)

அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் பெண்மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு மதமும் மூட நம்பிக்கைகளும் அந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்த நிகழ்த்தப்பெறும் சடங்குகளும் எந்தெந்த வகைகளில் காரணங்களாக அமைகின்றன என்பதைப் பேசுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சூழலில் இவ்விதப் பதிவு வேறு எவரிடத்தும் காண்பதரிது.

•••

“மூடர்கள் ஆதலாலே முழுதுமே பார்ப்பார்க்கு ஈந்து

வாடியே மனமும் நொந்து வாழ்க்கையை

              இழந்து அந்தோ

கூடிய பெண்டு பிள்ளை குலாவிய சுற்றம்நீங்கி

நீடிய காட்டுக்கேகி நிலையிலாது அலைந்து சாவார்” (11)

இந்துமதம் ஆசாரங்களைப் போதிக்கிறது. இந்த ஆசாரங்கள் பல்வேறு சடங்குகளை நிகழ்த்துமாறு கூறு கின்றன. இச்சடங்குகளைப் பார்ப்பனர்கள் நிகழ்த்து கிறார்கள். பார்ப்பனர்கள் மீது நம்பிக்கை எந்த அளவு உள்ளது என்பதை மநுநீதி கூறும் பின்வரும் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன.

“உலகம் முழுவதும் கடவுளின் ஆற்றலுக்குட் பட்டது. கடவுள் பிராமணர்களின் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணர் களே நம்முடைய கடவுளாயிருக்கிறார்கள். (மேற்படி:214)

மநுநூல் பிராமணர்கள் குறித்து மேலும் கூறுவது.

“பிராமணனைக் காயப்படுத்தும் எண்ணத்துடன் தாக்கும் ஒருவன் நூறு ஆண்டுகள் ‘தாமிசிரி’ என்னும் நரகத்தில் உழல்வான்; சினத்தால், திட்டமிட்டு ஒரு பிராமணனைத் தாக்கும் நோக்கத்தோடு ஒரு புல்லினால் அவனைத் தாக்கினால் கூட, அவ்வாறு செய்தவன் 120முறை தூய்மையற்ற விலங்குகளின் கருப்பைகளில் பிறப்பெடுப்பான்”. “ஒரு மனிதன் தன் பசுவினை விலைக்கு விற்றால் நரகத்துக்குப் போவான்; அதனையே அவன் பிராமணனுக்குத் தானமாகக் கொடுத்தால் சுவர்க்கத்திற்குப் போவான்” (214)

எனவே இந்துமதத்தின் மூலமான மநுநூல், பார்ப்பனர்கள் பற்றிக் கூறும் இக்கருத்து சார்ந்து மோட்சக் கோட்பாடு பேசப்படுகிறது. எல்லோரும் மோட்சம் அடைய வேண்டுமானால், இந்துமதத்தின் ஆசாரங்களைப் பின்பற்ற வேண்டும் என்னும் நம்பிக்கை சாதாரண மனிதர்களிடத்தில் இன்றும் கூட ஆழமாகச் செயல் படுவதைக் காண்கிறோம். இந்துசமயக் கோட்பாடுகள் குறித்து, இந்து சமயப் புலமையாளரான டி.எம்.மகா தேவன் அவர்களது வரையறை பின்வருமாறு:

இந்துசமயக் கோட்பாடுகள் அனைத்துமே ஆன்மாவைப் பிறவித் தளையிலிருந்து முழுமையாக விடுவித்து, முத்தி பெறச்செய்ய வேண்டும் என்னும் நோக்கமுடையவைகளாதலால், அவை அனைத்துமே ஒழுக வேண்டிய நெறிமுறைகளில் கருத்து ஒன்றுபடுகின்றன.

முத்தி மார்க்கம் என்பது இந்த உலகச் சிந்தனையே இன்றி வேறு உலகம் ஒன்றைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பது என்பது அன்று. இந்துமதச் சடங்குகளையும், வழிபாட்டு முறைகளையும் ஊன்றிப் பார்ப்போமேயானால், இந்து சமயமானது இந்த உலக இன்பங்களை எட்டி உதைத்துத் தள்ளவில்லை என்பது புலனாகும். இந்து மதத்தைச் சார்ந்தவனும் மற்றைய உயிரினங்களைப் போன்றவனே.

முத்தி அடைவதைத் தவிர வேறு மூன்று நோக்கங்களும் இந்து மதத்தைச் சார்ந்தவனுக்குண்டு. பொருளாதார மேம்பாடு, புலனின்பம், புனிதமான நெறிகள் என்பவைகளாகும் அவை. ஆனால், அவை நீண்ட வாழ்விற்கு வழிபடுதல், உலக சுகத்திற்குப் பாடுபடுதல், நன்மக்களைப் பெற விரும்புதல் ஆகிய எல்லாவற்றையும் பழைய நூல்களில் அதிகமாக நாம் பார்க்கலாம்.

சாதி என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு அமைப்பு வடிவமே அன்றி வேறில்லை..! இந்துத்துவம் பெரும் சாதி வடிவ அமைப்பில் உழன்று கொண்டிருக்கின்றது. இத்தகைய சாதியை ஒழிக்க என்ன வழி? சாதிப் பித்து தலைவிரித்தாடுவது ஏன்..? இதனை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்..?

சாதி என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு அமைப்பு வடிவமே அன்றி வேறில்லை..! இந்துத்துவம் பெரும் சாதி வடிவ அமைப்பில் உழன்று கொண்டிருக்கின்றது. இத்தகைய சாதியை ஒழிக்க என்ன வழி? சாதிப் பித்து தலைவிரித்தாடுவது ஏன்..? இதனை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்..?

ஆனால், ஆன்ம வளர்ச்சி குன்றிவிடாதபடி இவைகளை ஒருவன் அனுபவிக்க வேண்டும். செல்வமும் சுகமும் புனிதமான அடிப்படையில் இருக்குமானால், முத்தி நோக்கிய ஆன்மாவின் பயணம் தடைப் படாது. இதுவே இந்து சமயப் பழக்க வழக்கங் களின் பின் நிற்கும் பொருத்தமான விளக்கமாகும். (இந்துசமயத் தத்துவம்:2001:204)

மேற்குறித்த விளக்கம், இந்துசமய முக்திகோட்பாடு மீது மனிதர்கள் கொள்ளும் ஈடுபாட்டைக் காட்டுவதாக அமைகிறது. இத்தன்மைகளை அ.வெ.அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதனை விமர்சனம் செய்யும் வகையில் பின்வரும் பாடல் அமைகிறது.

கருமஞ் செய்திட்ட பின்புங் கர்த்தன்றன்

               பதம் பொருந்தி

இருந்திடத் தென்புலத்தார்க்கு

           ஈந்திடப் பார்ப்பார்கட்குத்

திரும்பிய வருடந் தோறுந் திவசமாளியம் என்றேந்தி

வருந்தியே பொருள் பதார்த்தம்

         வழங்குவர் எளிமையாளர் (689)

“இந்துமத ஆசார ஆபாச தரிசினி” நூலில் மேற்குறித்த மோட்சம் நோக்கிச் செயல்படும் சடங்குகள் குறித்தே விரிவான விமரிசனங்களைச் செய்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், சமயச் சீர்திருத்தம் பேசியபோது, சமயம் என்பதே மக்களுக்குக் கேடு விளைவிப்பதுதான் என்னும் கருத்தை முன்வைப்பது சாதாரண செயலன்று. இதனை அ.வெ.அவர்கள் செய்திருப்பதைக் காண்கிறோம்.

•••

இந்துமதம் என்பதே புராணக் கதைகளின் குவியலாகவே உள்ளது. இந்துமதக் கடவுளர்கள் குறித்த நூற்றுக்கணக்கான புராணக் கதைகள் இருப்பதை நாம் அறிவோம். இக்கதைகளின் பொய்த் தன்மைகளை அ.வெ. அம்பலப்படுத்துகிறார். ஆண்டாள் அவதாரக் கதை, அருந்ததி புராணம், அங்காளம்மன் கதை, திரு ஞானசம்பந்தர் கதை, சுந்தர மூர்த்தி கதை, மாணிக்க வாசகர் கதை, சிவராத்திரி புராணம், பரசுராமன் கதை, ரேணுகா தேவி புராணம், இந்திரன் கதை, அகலிகை கதை ஆகிய அனைத்தையும் இந்நூலில் விமர்சனத்திற்குட் படுத்தியுள்ளார். இக்கதைகள் பேசும் ஒழுக்க மரபுகள், சாதாரண மனித வாழ்க்கைக்கு எதிராக இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளார். பொய்யான புராணக் கதைகளால், இந்துமதத்தில் பேசப்படும் ஆபாசங்களை மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். ‘ஆபாச தரிசினி’ என்னும் பெயர் கொடுப்பதற்கான அடிப்படைகளை இந்து மதத்தில் உள்ள கதைகள் கொண்டிருப்பதை இந்நூலில் தர்க்கபூர்வமாக விவாதித்துள்ளார். இருபதாம் நூற்றாண்டில் ஈ.வெ.ரா. பொதுக்கூட்டங்களில் வெளிப்படுத்திய குரலை இதில் காணமுடிகிறது.

•••

“பஞ்சாங்கம் ஒன்று கட்டிப்

       பலமுறை படித்துக்காட்டி

அஞ்சாமல் இதனிற் சொல்வது

        அனுசரித்திடுவோர் நாளும்

துஞ்சாமல் வாழ்வர் என்று துணிவுடன்

              பணம் பறித்தற்

கெஞ்சாமற் புரட்டுப் பேசி இரண்டொரு

            சுலோகஞ் சொல்லி” (5)

பஞ்சாங்கம் எவ்வளவு மோசடியானது; அதனை வைத்துக்கொண்டு பிழைப்பவர்கள் யார்? அதனால் சீர்குலைவோர் யார்? ஆகிய விவரங்களை மேற்குறித்த பாடல் மூலம் அ.வெ.வெளிப்படுத்துகிறார்.

பல்லி சாத்திரம், கோட்டான் சாத்திரம், பஞ்சபட்சி சாத்திரம், சர சாத்திரம், தும்மல், சகுனங்கள், குறி கேட்டல், தோஷங்கள் ஆகியவை குறித்து இந்நூலில் பேசப்பட்டுள்ளது. இவை மூடநம்பிக்கைகளாக அமைந்து சாதாரண சனங்கள் வாழ்க்கையில் எத்தகைய இன்னல்களை ஏற்படுத்துகின்றன என்றும் கூறுகிறார். சோனகர் மந்திரம், மலையாள மந்திரம் பிற பல்வேறு மந்திரங்கள் என்பவைகள் எவ்வகையில் பொய்யானவை என்பதை இந்நூல் பேசுகிறது. (381-387) மந்திரங்களை வைத்துக் கொண்டு பிழைக்கும் பூசாரிகளையும் இந்நூல் தோலுரித்துக் காட்டுகிறது.

“கடவுள் ஒன்றே” (பாடல்.3) என்னும் கருத்துடையவர் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார். ஆனால் கடவுளை அடிப்படையாகக் கொண்ட மதத்தின் பேரால் நடக்கும் அனைத்தையும் மறுதலிக்கிறார். இவர் பிரம்ம சமாஜத்தின் மீது ஈடுபாடு உடையவர் என்பதையும் பின்வரும் பாடல் மூலம் அறிகிறோம்.

“சாதி பேதங்கள் பற்றுஞ் சமய பேதங்கள் கட்சி

வாதிடத் தின்னும் பேதம்

        வகைவகைப் பேதங்காட்டிப்

பேதிடச் செய்ததாலே பிணக்காங்

         கொண்டிருக்கப் பார்த்தே

ஓதிடு நூல் ஆராய்ந்தோர் உயர்

       பிரம்மசமாசஞ் செய்தார்” (753)

பிரம்ம சமாசம், ஓரிறைக் கோட்பாட்டை முன் வைத்த சமயச் சீர்திருத்த இயக்கம். அதன் கோட்பாடுகளை இவருக்கு ஏற்புடையதாகக் கருதுகிறார். ஆனால், பிரம்ம சமாசத்தார்கள் இந்துமதத்தை இவ்வாறு விமர்சனத்திற்கு உட்படுத்தினார்களா? என்பது சந்தேகம். இவர் அந்தத் தன்மைகளில் வேறுபட்டவராகவே இருக்கிறார்.

அ.வெ.அவர்கள் செயல்பட்ட காலத்தில் வடலூர்.சி.இராமலிங்கம் என்னும் வள்ளலார் (1823-1894) வாழ்ந்தார். சைவ மதப்பரப்புதலில் தம்முழு வாழ்க் கையையும் அர்ப்பணித்த ஆறுமுக நாவலர் (1822-1879) இருந்தார். சைவ மரபுகளைத் தத்துவக் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்திய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையும் (1855-1897) இவரது காலத்தில் இருந்தவரே. சோமசுந்தர நாயகரும் (1846-1901) இக்காலத்தவர்தான். இவர்கள் பேசிய அனைத்து மரபுகளுக்கும் மாற்றான மரபை முன்னெடுத்தவர் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார். இதனால்தான் நாத்திக இயக்கமான சென்னை இலௌகிக சங்கத்தினருடன் அவரால் தொடர்பு கொண்டிருக்க முடிந்தது.

அ.வெ.அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மத எதிர்ப்புக் கலகம் செய்த பெரியவராக இருக்கிறார். ஏழை வன்னியர்கள் நிலம் பறிக்கப்பட்டதற்குப் போராடியதைப் போன்றே இந்துசமயச் சடங்குகளால் ஏழை மக்கள் ஏமாற்றப்படுவதற்கு எதிராகக் கலகம் செய்திருக்கிறார். இந்தப் பின்புலத்தில் இவரது “இந்துமத ஆசார ஆபாச தரிசினி” என்னும் ஆக்கம் தனிச்சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது.

பார்வை நூல்கள்

1) மர்ரே பதிப்புக்குழு   பதினெண் கீழ்க்கணக்கு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, சென்னை, 1981

2) மகாதேவன், டி.எம்.பி., இந்துசமயத் தத்துவம், ஞா.இராஜாபகதூர் (மொ.பெ.) குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2001

3) வில்கின்ஸ், டபிள்யூ.ஜே.,  நவீன இந்துத்துவம், ச.சரவணன் (மொ.பெ.), சந்தியா பதிப்பகம், சென்னை, 2009

4) கனகசபைப்பிள்ளை, கூடலூர்   வருணசிந்தாமணி, (மூன்று காண்டங்கள்), தனியாம்பாள் விலாச அச்சுயந்திரசாலை, இரண் டாம் பதிப்பு, சென்னை, 1925

5) முனிசாமிப்பிள்ளை,  ஜாதிசங்கிரக சாரம், கவி ரஞ்சனி அச்சுக் கூடம், 1872

6) வேலாயுத முதலியார், தொழுவூர்    வேளாண் மரபியல், கூடலூர் குப்பயப் பிள்ளையால் அச்சிற் பதிப்பிக்கப் பட்டது, 1880

7) Lorenzen.N.David  Who Invented Hinduism? Essays on Religion in History,Yoda press, New Delhi2006

8) Jones.W.Kenneth Socio Religious Reform movements in British India, Cambridge Univer sity Press, Newyork, 1994.

குறிப்பு : அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு, (இந்து-மதம்-ஆதிக்கச் சாதிகள்: ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாறு (2013), என்ற நூலைப் பேராசிரியர் வீ. அரசு பதிப்பித்துள்ளார். அந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை இதுவாகும். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்நூலை அண்மையில் வெளியிட்டுள்ளது.

Related Post