– இப்னு கலாம்
கேள்வி 1:
ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் வேதங்களை அருளினானா? இந்தியாவுக்கு எந்த வேதம் அருளப்பட்டது? வேதங்களையும் இதர புராணங்களையும் அல்லாஹ்விடம் இருந்து அருளப்பட்ட வாக்குகளாகக் கொள்ளலாமா?
பதில்: வேதவாக்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அருளப்பட்டன. குர்ஆன் கூறுகிறது:
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம் அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம் மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.(13:38)
நான்கு வேதங்கள் பற்றி குர்ஆன் கூறுவது தெளராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன்.
தவ்ராத் – மூஸா(அலை)
ஸபூர் – தாவூத்(அலை)
இன்ஜீல் – ஈஸா(அலை)
குர்ஆன் – முஹம்மது(அலை)
முந்திய எல்லா வேதங்களும் அந்ததந்த சமுதாய மக்களுக்கு அருளப்பட்டன. குர்ஆனுக்கு முன்பு அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே அருளப்பட்டது. குர்ஆன் மட்டும் ஒட்டு மொத்த உலக சமுதாயத்தாருக்கும் அருளப்பட்டது. குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட இறுதி வேதம். இது முஸ்லிம்களுக்கு மட்டும் வேதநூல்,அரபிகளுக்கு மட்டுமே வேதநூல் என்ற வாதங்கள் தவறு குர்ஆன் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறது.
அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும் மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம் புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!)(14:1)
இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.(14:52)
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (2:185)
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம் எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (39:41)