– வாமி
உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்ந்த படித்தரங்களை அவன் வழங்கியிருக்கின்றான்; அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக! நிச்சயமாக உம் அதிபதி தண்டனை வழங்குவதில் விரைவானவன்; மேலும் நிச்சயமாக அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
நேர்மையான உழைப்பு இஸ்லாத்தில் இறைவழிபாடாக கருதப்படுகின்றது. முஹம்மத் நபி (ஸல்)கூறினார்கள். ‘பகலில் உழைத்துக்களைத்து இரவில் உறங்கச்செல்பவனின் பாவங்களை இறைவன் மன்னித்து விடுகிறான். அறிவைத் தேடுதலும் இஸ்லாத்தில் மாபெரும் இறைவழிபாடாகும். அறிவைத்தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் சமயக்கடமையாகும் 70 ஆண்டுகள் வணக்கம் புரிவதை விட ஒரு மணிநேரம் அறிவைப் பெறுவது மேலானது என்றெல்லாம் அறிவின் சிறப்பைக் குறித்துத் தம் தோழர்களிடம் முஹம்மத் நபி (ஸல்) வலியுறுத்தினார்கள்.
இறைவனுக்காக சமூகத்தில் கலந்துறவாடல் ஒற்றுமை உண்டாக்கல் இணக்கமாக நடந்து கொள்ளுதல் ஆகியவையும் இறைவழிபாட்டின் வட்டத்திற்குள் வந்து விடுகின்றன. நண்பனை புன் முறுவலுடன் எதிர் கொள்வதும் தர்மமே. வாகனத்தில் ஒரு மனிதரை ஏற்றிவிட உதவுவதும் தர்மமே. பக்கத்திலிருப்பவரின் பாத்திரத்தில் நீர் நிரப்பித் தருவதும் தர்மமே.
ஒருவன் தனது கடமைகளை ஒழுங்காக செவ்வனே நிறைவேற்றுவதும் இறை வழிபாட்டின் ஓர் அம்சமே என்று இங்கு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் சட்டத்திற்குட்பட்ட வகையில் – நேர்மையான முறையில் பொருளீட்டி தன் குடும்பத்தாருக்காக செலவழிப்பாரேயானால். அதுவும் தர்மமே அதற்கான நற்கூலி அவருக்கு வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதும் இறைவழிபாடே. தன் கையால் தன் மனைவிக்கு ஒரு கவளம் உணவு ஊட்டுவதும் இறைவழிபாடே. அதுமட்டுமல்ல நம் உற்சாகத்திற்காக மன இன்பத்திற்காக செய்யும் சில செயல்களும் இறைவழிகாட்டுதலுக்கேற்ப அமைந்துவிட்டால் அவையும் வழிபாடாக கருதப்படுகின்றது
மனைவியுடன் உறவு கொள்வதற்கும் வெகுமதி வழங்கப்படுகிறது என்று முஹம்மத் நபி (ஸல்) கூறியபோது அவர்களின் தோழர்கள் வியப்புடன் கேட்டார்கள். ‘நாங்கள் மன மகிழ்ச்சிக்காக விரும்பும் செயலுக்கு எப்படி இறைவனிடமிருந்து வெகுமதி கிடைக்கும் என்று கேட்டார்கள். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள் நீங்கள் மன இச்சைக்காக சட்டவிரோதமாக தவறாக உறவு கொண்டால் தண்டனை உண்டல்லவா அது போல ஆகுமான வழியில் உங்கள் மனைவியுடன் உறவில் ஈடுபடுவதற்கும் நற்கூலி உண்டு என்று கூறினார்கள். இதிலருந்து நேர்மையான உறவுகளும் இறைவழிபாடே என்பது தெளிவாகும். இஸ்லாத்தில், உடலுறவு வெறுக்கத்தக்க, தவிர்க்க வேண்டிய செயலல்ல மாறாக மண உறவுக்கு விரோதமாக தவறான வழியில் உறவு கொள்வது பாவம், வெறுக்கத்தக்க செயலாகும்.
இஸலாம் மனிதனின் ஆக்ககரமான செயல்களைனைத்தையும் உள்ளடக்கிய முழு வாழக்கைக் கோட்பாடு என்பது இதுவரை கூறிய ஆதாரங்களின் வாயிலாக புலனாகும். இக்கூற்று இஸ்லாம் ஓர் இயற்கையான வாழ்க்கைத்திட்டம் என்னும் கண்ணோட்டத்தோடு ஒத்துப்போவதை புரிந்துக் கொள்ளலம்.
தனி நபர் வாழ்வு மற்றும் கூட்டு வாழ்வு பொருளாதாரம் அரசியல் ஆன்மீகம் ஆக அனைத்துத் துறைகளையும் இஸ்லாம் ஒழுங்குபடுத்துகிறது, சீரமைக்கிறது அதனால்தான் மனித வாழ்வின் சின்னஞ்சிறு விவகாரத்திலும் இஸ்லாம் உயரிய சரியான வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த வழிகாட்டுதல்களை அந்தந்தத் துறைகளில் இஸ்லாமியக் கடமைகளைப்பின் பற்றுவதாகவே கொள்ளப்படும். மனிதனின் ஒவ்வொரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் இறைவணக்கமாகக் கருதப்படுகிறது என ஒருவன் நினைக்கும் போது அது அவனுக்கு பெரும் உந்து சக்தியாகத் திகழ்கிறது.
இந்த வாழ்க்கைத் திட்டத்தில் இறைத் திருப்தி ஒன்றே மேலோங்கி இருப்பதால் இதனை மேற்கொள்ளும் மனிதன் தனது பணிகளை இயன்றவரை சிறப்பாகச்செய்து முடிக்கத் துணிகிறான். யாரும் அவனை கண்காணித்தாலும் சரி கண்டு கொள்ளாமல் இருந்தாலும் சரி அவன் ஏமாற்றத்துணிவதில்லை. ஏனெனில், அல்லாஹ் தன்னை எங்கும் எப்பொழுதும் நிரந்தரக் கண்காணிப்பாளனாக இருக்கின்றான் என்பதை மனிதன் உணர்ந்து விடுகின்றான்
இஸ்லாத்தில் உள்ள வணக்க வழிபாடுகள் சடங்கு சம்பிரதாயங்கள் அற்றவை என்று பார்த்தோம் இதனால் இறைவனின் வெகுமதி அளவிடற்கரிய முறையில் வாரி வழங்கப்படும் என்று இதன் வாயிலாக உணர்த்தப்படுகின்றது. நோன்பு மனிதனின் மனச்சான்றை தட்டி எழுப்புகிறது. ஒட்டு மொத்த சமுதாய நோக்கில் கூட்டாக இணைந்து பணியாற்ற பயிற்சியளிக்கிறது அது மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனையும் அது மேலும் வலிமையுடையவனாக்குகிறது. அளவுக்கதிகமாக உழைத்த ஜீரண உறுப்புகளுக்கு நோன்பு ஒரு மாதகால கட்டாய ஓய்வளிக்கிறது. தேவைகள் நிறைவேறாமல் வாழ்நாள் முழுவதும் பஞ்சத்தில் உழலும் வறியோரின் நிலைமையினை நோன்பு நமக்கு உணரச்செய்கிறது பொருளாதாரத்தில் நலிந்திருக்கும் ஏனைய முஸ்லிம் சகோதரர்களின் துயர நிலையினை நோன்பு உணர வைக்கிறது. வறியவர்களுக்காக பச்சாதாபப்பட்டு மனமிறங்கும் பண்பை நோன்பு தோற்றுவிக்கிறது.
இறுதியாக இஸ்லாத்தின் இன்னும் ஒரு கடமையான ஹஜ்ஜைப் பார்ப்போம். மக்காவில் இருக்கும் இறையில்லத்திற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளுவதே ஹஜ். இஸ்லாத்தின் இந்த அடிப்படை மக்களிடையேயுள்ள அனைத்துவிதமான வேற்றுமைகளையும் களைந்து மனித குலத்தின் ஒற்றுமையை மலர வைக்கிறது. உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் முஸ்லிம்கள் ஒரே ஆடையணிந்து ஒரே மொழியில், ஒரே குரலில் ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றார்கள். ‘ லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் ‘ என் அதிபதியே நான் உனக்கு சரணம் சுயக்கட்டுப்பாடு சுய ஒழுங்கிற்கான பயிற்சியே ஹஜ். மத சடங்குகள் மட்டும் இங்கு பேணப்படவில்லை பறவை, தாவர இனங்களுக்கும் இங்கு அமைதியும் பாதுகாப்பும் தரும் சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் பாதுகாப்பு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.
‘அல்லாஹ் ஏற்படுத்திய புனித சடங்குகளை யார் மகிமைப் படுத்துகின்றாரோ அது அவனுடைய இறைவனிடத்தில் மிக நன்மையாகவே முடியும்.’ ( 22 : 30)
‘எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட சடங்குகளை கண்ணியப்படுத்துகின்றாரோ அது அவரின் உள்ளத்தின் பரிசுத்தத்தன்மையை அறிவிக்கிறது.’ (22 : 32)
ஹஜ் ஒரு மாபெரும் மாநாடு ஆம் உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு இனங்கள் நாடுகள் அமைப்புகளிலிருந்து முஸ்லிம்கள் இங்கே ஆண்டு தோறும் சங்கமிக்கிறார்கள் அவர்களின் ஒரே இறைவன் நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்துள்ளான். மாநாட்டில் கலந்து கொள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் அழைப்பு உண்டு. யாரையும் தடுத்து நிறுத்த ஒருவருக்கும் அதிகாரமில்லை.
அனைத்தும் கூடிய நல்ல அமல்களே இஸ்லாம் கூறும் இறைவழிபாடாகும். தொழுகை மற்றும் ஒரு சில வணக்கங்கள் மட்டும் இறைவனுக்கு செய்யும் வழிபாடாக இஸ்லாம் கூறவில்லை.