Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

சாதிப்பித்து வேண்டாமே..!

சாதிப்பித்து வேண்டாமே..!

சாதிப்பித்து வேண்டாமே..!

 

சாதி என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு அமைப்பு வடிவமே அன்றி வேறில்லை..! இந்துத்துவம் பெரும் சாதி வடிவ அமைப்பில் உழன்று கொண்டிருக்கின்றது. இத்தகைய சாதியை ஒழிக்க என்ன வழி? சாதிப் பித்து தலைவிரித்தாடுவது ஏன்..? இதனை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்..?

மனித குலத்தை ஒரு சுயநல சிறுபான்மைப் பிரிவினராகிய மதகுருமார்கள் மற்றும் அரசியல் குருமார்கள் எண்ணற்ற மதங்களாக, ஜாதிகளாக, இசங்களாக,  இயக்கங்களாக, பிரிவுகளாகப் பிரித்து, அற்ப உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். மதங்களை விட்டும், ஜாதிகளை விட்டும் மனித குலத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று முழக்கமிட்டுச் செயல்படுகிறவர்களும் உலகியல் பட்டம், பதவி, பேர் புகழ், அற்ப உலகியல் ஆதாயங்கள் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாலும், தங்களின் அற்பமான அறிவையே எல்லையாகக் கொண்டு செயல் படுவதாலும் அவர்களாலும் மத வேற்றுமைகளையோ, ஜாதிப் பிரிவுகளையோ ஒழிக்க முடியவில்லை.

உண்மையை உரத்துச் சொல்வதாக இருந்தால் மதவேற்றுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும் ஒழித்துச் சமத்துவச் சமுதாயம் அமைய அயராது உழைத்து மறைந்த மார்க்சு, ஏங்கல்ஸ், லெனின், சிங்காரவேலர், புலே, பெரியார், அம்பேத்கர், லோகியா மட்டுமல்ல, இன்று சமத்துவ சமுதாயம் அமையவும், இன இழிவு நீங்கவும் அயராது பாடுபடுகிறவர்கள் போல் லட்சோப லட்சம் அறிஞர்கள் உழைத்தாலும், அவர்களைப் போல் கோடிக்கணக்கான அறிஞர்கள் யுக முடிவு வரை அயராது உழைத்தாலும் மத வேற்றுமைகளையோ, ஜாதிப் பித்தையோ ஒழிக்க முடியவே முடியாது.

அகிலங்கள் அனைத்தையும் படைத்து நிர்வகிக்கும் இணை, துணை இல்லாத தன்னந்தனியனான முக்காலமும் அறிந்த ஏகன் இறைவனின் முழுமை பெற்ற அறிவுடன், மனித குலத்தில் பிறந்த இப்படிப்பட்ட அனைவரின் அறிவையும் ஒன்று சேர்த்து ஒப்பிட்டாலும், அது கடலில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால், அந்த ஊசியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நீரை விட மிகமிக அற்பமானதே. அப்படிப்பட்ட அற்பமான அறிவை உடையவர்கள் இறைச் சட்டங்களை மிகைக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. அது வீண் முயற்சியே! மனிதர்கள் இயற்றும் நியதிகள் மனுநீதியாக இருக்குமே அல்லாமல் இறை நீதியாக ஒருபோதும் ஆகா.

இந்த உண்மையை, இந்த அறிஞர்கள் அனைவரும் ஜாதிப் பித்தை ஒழித்துச் சமத்துவச் சமுதாயம் உருவாக பலநூறு ஆண்டுகள் அயராது உழைத்தும் இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜாதி வெறியால் உருளும் பல்லாயிரம் தலைகளும், தீக்கிரையாகும் ஆயிரக்கணக்கான வீடுகளும், விரயமாகும் கோடிக்கணக்கான பணமும் உறுதிப்படுத்தி வருகின்றன. நடுநிலைச் சிந்தனையாளர்கள் இதை மறுக்க முடியுமா? ஒருபோதும் முடியாது! ஆக ஜாதிகளை ஒழித்து, இன இழிவை நீக்கி மனித சமுதாயத்தைக் காக்க இப்பேரறிஞர்களால் முடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும். ஆம்! இவர்களின் முயற்சி வீண் முயற்சி!.

அதே சமயம் சில பல தலைமுறைகளுக்கு முன்னால் இன இழிவால் கூனிக் குறுகி, நாயிலும் கேடாக வாழ்ந்து வதைப்பட்டுக் கொண்டிருந்த, பள்ளு, பறை, சக்கிலி என இழித்துரைக்கப்பட்ட சமூகத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தைத் தழுவியவர்களின் வாரிசுகள்தான் இன்று இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் 98 சதவிகித முஸ்லிம்கள். அவர்கள் இஸ்லாத்தின் சிறப்பை மேன்மையை விளங்கி முஸ்லிமாகவில்லை. இன இழிவிலிருந்து விடுபட பெயரளவில் முஸ்லிம்கள் ஆனார்கள். அதாவது மதம் மாறினார்களே அல்லாமல் மனம் மாறவில்லை. அங்கு இந்து மதகுருமார்களின் தவறான போதனைகளால் மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கி இருந்தது போல், இங்கும் முஸ்லிம்கள் மத குருமார்களின் தவறான போதனைகளால் மூட நம்பிக்கைகள்,  மூடச்சடங்கு சம்பிரதாயங்கள் இவற்றில் மூழ்கி இருக்கிறார்கள்.

இன இழிவை விட்டு விடுபட அம்பேத்கர், பெரியார் போன்றோர் இஸ்லாத்தைத் தழுவ முற்பட்டபோது, அவர்களின் ஆதரவாளர்கள், முஸ்லிம்களிடையேயும், ஹிந்துக்களிடையே காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும்  அப்படியே காணப்படுகின்றன என்று கூறியே அவர்களைப் பின்வாங்கச் செய்தனர். அதற்கு மாறாக ஓர் உண்மையை அவர்கள் காணத் தவறிவிட்டனர். அல்லது அவர்கள் தங்கள் அற்ப இவ்வுலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். அதாவது மதம் மாறிய முஸ்லிம்களிடம் ஹிந்துக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் காணப்பட்டாலும் அவர்களிடம் பல ஆயிரம் வருடங்கள் நீங்காது ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது என்பதுதான் அந்தப் பேருண்மையாகும்.

அந்தந்த இறைத் தூதர்களுக்குப் பின்னால் அந்தந்த சமூகங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு இஸ்லாம் என்ற தூய வாழ்க்கைக்குரிய நேர்வழியைக் கோணல் வழிகளாக்கி அதாவது ஹிந்து, யூத, கிறித்தவம் போன்ற பல மதங்களாக ஆக்கி மக்களை வழிகெடுத்து வயிறு வளர்க்கும் மற்ற மதங்களின் மதகுருமார்களைப் போல், இறுதித் தூதருக்குப் பின்னால் திருட்டுத்தனமாக இறுதிச் சமூகமான முஸ்லிம் சமுதாயத்தினுள்ளும் புகுந்து கொண்டுள்ள முஸ்லிம் மதகுருமார்களும் தங்களின் கற்பனைகளைப் புகுத்தி தூய இஸ்லாமிய  சட்டங்களை திரித்து வளைத்து மற்ற மதங்களின் மதகுருமார்கள் போல் வயிறு வளர்த்து வருகிறார்கள்.

இந்த உண்மையை இறைவன் கொடுத்த முழுமை பெற்ற இறைவனால் பாதுகாக்கப்பட்டு வரும் இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. தங்களின் திருட்டுத் தனம் அம்பலப்பட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் குர்ஆனைப் பொருள் அறிந்து படிக்க விடாமல் தடுத்து வருகிறார்கள். இந்த அவர்களின் துர்ச்செயலே அவர்களின் அற்பப் புத்தியையும், திருட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்துகிறது. எனவே இம்மதகுருமார்கள் போதிப்பது தான் இஸ்லாமிய மார்க்கம் என்று ஏமாற வேண்டாம் என அயராது பாடுபடும் அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் மதகுருமார்கள் போதிக்கும் முஸ்லிம் மதச்சடங்குகளைக் காட்டி, தூய இஸ்லாத்தைத் தழுவ விரும்பும் மக்களைத் தடுக்க வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இன்னொரு உண்மையையும் உரக்கச் சொல்லித்தான் ஆக வேண்டும். எப்படி மதகுருமார்கள் கடவுளின் பெயரைச் சொல்லியே மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கிறார்களோ, அதேபோல் அரசியலின் பெயரால் மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும் அரசியல் மதகுருமார்களும் நாட்டில் பெருத்துப் போய்தான் இருக்கிறார்கள். தங்களின் அற்ப உலகியல் ஆதாயங்களுக்காக, பதவி சுகங்களுக்காகப் பெரும்பான்மை மக்களை பலி கொடுக்கும் அற்பர்களாகவே இன்றைய அரசியல்வாதிகள் பவனி வருகிறார்கள்.

எந்தத் திட்டத்தைச் சொன்னாலும் நிறைவேற்றினாலும் அதனால் தங்களுக்கு எந்த அளவு ஆதாயம் கிடைக்கும் என்று பார்க்கிறார்களே அல்லாமல், மக்கள் நலனின் கடுகளவும் அக்கறை காட்டுவதாக இல்லை. அன்று அற்பப் புத்தியுள்ள சில மன்னர்கள் அந்நியனுக்கு வணிகத்திற்கென்று இடம் கொடுத்தார்கள். அவன் நாட்டையே அடிமைப்படுத்தி நம் நாட்டு வளங்களைக் கொள்ளை அடித்துச் சென்றான். அதேபோல் இன்றைய சுயநல ஆட்சியாளர்கள், அதே வணிகத்தின் பெயரால் அந்நியனுக்கு இடம் கொடுத்து மக்களைப் பலி கொடுத்து அவர்கள் ஆதாயம் அடைய முற்படுகிறார்கள்.

Related Post