– மு.அ.அப்துல் முஸவ்விர்

வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல.
வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல. தனது குளிர்நிழலை இறைஉவப்புக்காய் நோன்பு பேணும் மாந்தர் மீது தாரை வார்த்து அவர்தம் வாழ்வை இறைமாறிலிருந்து நீக்கி, இறைஉவப்பின்பால் சாயச் செய்யும் உன்னத மாதம் இது!இறைக்கட்டளையை அழகாய்ப் பேணி,மறுமையில் ஏகஇறையிடமிருந்தே நேரடியாக நற்கூலி பெறும் அருட்பேறுக்கான வழிமுறையாக இருக்கும் இம்மாத நோன்பு நம்மை இறைமாறிலிருந்து விலக்கச் செய்யட்டும்.இறையருளை மும்மாரி போல் எம் மீது படரச் செய்யட்டும்!
இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி இருத்தலே, புனித ரமளானில் நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய அம்சமாகும்.
இறையச்சத்தை ஏற்படுத்துவதும் அதனைச் செழித்து வளரச் செய்வதும்தான் நோன்பின் முதன்மையான நோக்கமாகும்.இறையச்சம் செழித்து வளர்கின்ற வசந்த காலம்தான் ரமளான் மாதம்!எனவே.இந்த மாதத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்வதிலிருந்து விலகியிருப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
ரமளான் அல்லாத மற்ற மாதங்களின் இரவுகளிலும் பகல்களிலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் இதற்கு பொருளல்ல!
ரமளானில் திருக் குர்ஆனுடன் நமக்கிருக்கின்ற உள்ளார்ந்த தொடர்பு வலுப்படுவதாலும் இறைக்கட்டளைகளின்படிச் செயல்பட வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்துடன் பகற்பொழுது முழுவதும் பசித்திருப்பதாலும் தாகித்திருப்பதாலும், அதன் பிறகு இரவுகளில் நீண்ட நேரம் நின்று சிறப்புத் தொழுகைகளில் ஈடுபடுவதாலும், அந்தத் தொழுகையின்போது இறைமறை ஓதப்படுவதைக் காதார கேட்பதாலும் ஒரு தனிச் சிறப்புமிக்க உணர்வும் சூழலும் பூக்கின்றது.
இறைப்பற்றின் மணம் கமழ்கின்ற இந்த இனிமையன சூழலில் இறைவனின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் இட்டுச் செல்கின்ற யாதொன்றையும் விட்;டும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உணர்வு, ஆழமும் வலிமையும் அடைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்பதால்தான் இங்கு இந்த விஷயம் குறித்து அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது.
வாழ்வின் எல்லா விவகாரங்களிலும் இறைவனுக்கு மாறு செய்வதைவிட்டு விலகி இருத்தல் அவசியமாகும். ஆனால், குறிப்பாக, மற்ற மனிதர்களுடன் நமக்கு இருக்கின்ற தொடர்பு விஷயத்திலும், பிற சமூக உறவுகளிலும் கூட்டு ஒழுக்கம் பற்றிய விவகாரங்களிலும் இந்த கோணத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
ஒருவர் மிகுந்த பேணுதலுடன் நோன்பு நோற்கின்றார்.ஒரு வேளை விடாமல் தொழுகின்றார்.ஆர்வத்துடன் தானதர்மங்களையும் செய்கின்றார்.நாள்தோறும் திருக் குர்ஆன் ஓதுகின்றார்.எல்லாமே செய்கின்றார்.ஆனால், மறுமை நாளில் எந்த நிலையில் வருகின்றார் எனில், முதுகு முறிகின்ற வகையில் மற்றவர்களின் முறையீடுகளையும் புகார்களையும் சுமந்துகொண்டு வருகின்றார்.ஏன் அப்படி..?
எவரையாவது அடித்திருப்பார்,எவரையாவது திட்டியிருப்பார்,எவரையாவது அவமதித்திருப்பார்,எவருடைய மானத்திலாவது கை வைத்திருப்பார்,எவருடய மனத்தையாவது புண்படுத்தியிருப்பார்,எவராவது ஒருவரின் பொருளைத் தின்றிருப்பார்.அவரால் பாதிக்கப்பட்ட எல்லாரும் அவருக்கு எதிராக முறையிடுவார்கள்.அந்த முறையீடுகளும் புகார்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதால்தான், அந்தச் சுமை அவருடைய முதுகை முறிக்கின்ற அளவுக்கும் இருக்கும்!
இத்தகைய நபருக்கு என்ன நேரும்?
அவருடைய வணக்கங்கள்,அவர் செய்த நன்மைகள் எல்லாமே அவரால் உரிமை பறிப்புக்கு ஆளாகி பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டுவிடும் என்றும், இவ்வாறாக, அவருடைய நன்மைகள் எல்லாமே பகிர்ந்து கொடுக்கப்பட்ட பிறகும்கூட, அவர் செய்த அக்கிரமங்களால் பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுகள் முடியாமல் போகும்போது, பாதிக்கப்பட்டவர்களின் பாவங்கள் அவருடைய கணக்கில் சேர்க்கப்படும் என்றும் இறுதியில் அவர் முகங்குப்புற நரகத்தில் வீசியெறியப்படுவார் என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்; முஸ்லிம்
நோன்பு கடமையாக்கப்படுகின்றது என்கின்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ள வசனத் தொடரை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.நோன்பின் மூலமாக அடைய வேண்டிய அடிப்படை நோக்கங்கள் இவைதான் என்று உங்களுடைய மனம் உரத்துச் சொல்லும்.

வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல.