விண்ணுலகப் பயணம் 1
கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்…
‘மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற் காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்’ (அல்குர்ஆன் 17:1)
விண்ணுலகப் பயணம் (மிஃராஜ்) அண்ணலாரின் நபித்துவ வாழ்வில் பொன்னைப் போல் ஒளிரும் ஒரு உண்மை நிகழ்ச்சியாகும். இந்த மிஃராஜ் பயணம் வரலாற்றில் எத்தகைய புதுமையையும், புரட்சியையும் தோற்றுவித்தது? எவ்வாறு திருப்பு முனையாக அமைந்தது? என்பதை எண்ணிப்பார்ப்போர் நம்மில் மிகச் சிலரே இருக்கிறார்கள். ‘மிஃராஜ்’ என்ற பயணம் வல்ல நாயன் அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட அற்புதமாகும்.
அதில் என்ன மாதிரியான படிப்பினைகளெல்லாம் நமக்கு கிடைத்திருக்கின்றன என்பதை நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு இஸ்லாமிய சமுதாய அமைப்பு எப்படிப்பட்ட அடையாளங்களைத் தன்னுள் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அற்புத படிப்பினை மிஃராஜில் அடங்கியிருப்பதை நாம் காணலாம். நாம் வாழுகின்ற இந்த பூமி அல்லாஹ்வின் ஆட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய எல்லையாகும். இந்த பூமியின் பிரதிநிதிகளாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் உள்ளனர்.
ஒரு ஆட்சியின் கீழ் உள்ள பிரதிநிதிகளுக்கு ஏனைய சாதாரண மக்களுக்கு தெரியாத சில அரசின் உயர் விவகாரங்கள் காண்பிக்கப்படுவது போன்று வல்ல இறைவனும் தனது இப்புவியின் பிரதிநிதிகளான தூதர்களுக்கு தனது சில அற்புதங்களை காண்பிப்பதென்பது வியக்கத்தக்கதல்ல. இதற்குச் சான்றாக நபி இபுராஹீம் (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையாளராக ஆகுவதற்காக வானம் மற்றும் பூமியின் சான்றுகளை அல்லாஹ் காட்டியதாக அல்குர்ஆனில் (6:75) இல் கூறப்படும் விஷயத்தையும், இறந்தபின் எவ்வாறு எவ்வாறு நீ உயிர்ப்பிக்கின்றாய்’ என்று நபி இபுராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டபோது, பறவைகளை நான்கு துண்டுகளாக வெட்டி நான்கு திசைகளில் வைத்து அதனை அவர்களிடம் அழைக்குமாறு கூறி உயிர்ப்பித்துக் காட்டியதாக கூறும் அல்குர்ஆனின் (2:260)வது வசனமும் இறைவனின் அற்புதங்களுக்கு சான்றாகக் கொள்ளலாம்.
மிகச்சிறந்த இறைத்தூதர்களில் ஒருவரான மூஸா(அலை) அவர்களை இறைவன் தூர் மலைக்கு அழைத்து அவர்களுடன் உரையாடியதாக கூறப்படும் அல்குர்ஆனின் (28:29,30)வது வசனமும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு தனது விருப்பத்திற்கேற்ப இப்பிரபஞ்சத்தில் எவ்வாறு சில பிரச்சனைகள் நடைபெறுகின்றன என்பதை தனது அடியார்களில் ஒருவர் மூலம் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்தியதாகக் கூறப்படும் அல்குர்ஆனின்(18: 65,66) வது வசனங்களும்கூட இவைகளுக்குச் சான்றுகளாகும்.
அண்ணலாரின் வாழ்விலும் இதே போன்று சில விந்தையான அனுபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு முறை இறைவனுக்கு மிக நெருக்கமான வானவர் ஒருவரை அவரது உண்மையான வடிவத்தில் அடிவானத்தில் கண்டார்கள்.
இது மரியாதைக்குரிய தூதரின்(ஜிப்ரீலின்) சொல்லாகும். (அவர்) வலிமை மிக்கவர். அர்ஷ¬_க்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர். வானவர்களின் தலைவர், அங்கே நம்பிக்கைக்குரியவர். உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். அவரை(ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.(அல்குர்ஆன் 81:19-23)
மேலும் அதே வானவரை ஆன்மீக உலகின் துவக்கமான ஸிதரத்துல் முன்;தஹா எனும் இடத்திலும் அவரது இயல்பான வடிவத்தில் இன்னொரு முறை வெகு அருகில் கண்டார்கள். அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸிதரத்துல் முன்;தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவ்வானவரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன் 53:12,13,14)
அண்ணலாரின் விண்ணேற்றப் பயணமும் அவர்களுக்கு நிகழ்ந்த இது போன்ற அதிசயிக்கத்தக்க அனுபவங்களில் ஒன்றுதான்! இந்த பயணம் அண்ணலாருக்குச் சில விந்தைகளையும், அற்புதங் களையும் காண்பிப்பதற்காக மாத்திரமில்லாமல், அவர்களிடம் சில முக்கியமான பணிகளை ஒப்படைக்கப் படுவதற்காகவும் சில வழிகாட்டுதல்களை அருளப் படுவதற்காகவும் நிகழ்ந்தது.
நபி மூஸா(அலை) அவர்களை ‘தூர்” மலைக்கு அழைக்கப்பட்டு ‘பத்து கட்டளைகள்” தரப்பட்டதுடன், ஃபிர்அவ்னிடம் ‘இறைவனின் விருப்பத்திற்கேற்ப உனது ஆட்சியை சீர்படுத்திக்கொள்” என்று கோரிக்கை விடவும் கட்டளையிடப்பட்டது.
….1