-ஸையித் அபுல் அஃலா
ஹஜ்
மனிதர்களே! உங்கள் இறைவனின் கோபத்தைவிட்டு, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். உண்மையில் மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் (திகிலை ஏற்படுத்தும்) விஷயமாகும்! அதனை நீங்கள் பார்க்கும் நாளில் நிலைமை எவ்வாறு இருக்குமெனில், பாலூட்டும் ஒவ்வொரு தாயும் பால் அருந்தும் தன் குழந்தைகளை மறந்துவிடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பமும் வீழ்ந்துவிடும். மேலும், மக்கள் மயக்கமுற்றவர்களாய் உமக்குத் தென்படுவார்கள். உண்மையில் அவர்கள் மயக்கத்தில் இருக்கமாட்டார்கள். ஆயினும், அல்லாஹ்வின் வேதனை அந்த அளவுக்குக் கடுமையாய் இருக்கும்.
அவனியில் எங்கும் காண முடியா ஓர் உன்னத மாநாடு..! சகோதரத்துவத்தின் அத்தகு உச்சி மோர்தலால், சாத்தானிய சக்திகளுக்கு வேட்டு..! இறைஉவப்பின் இந்த தாத்பர்ய சங்கமத்துக்கு ஈடு ஏது..?
இப்ராஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப்பிறகு அவர்களின் வழித்தோன்றல்கள் மார்க்கத்தில் எவ்வளவு காலம் நிலைத்து நின்றார்கள் என இறைவன்தான் அறிவான்! எப்படியோ சில நூற்றாண்டுகளில் இந்த மக்கள் வழிகேட்டில் புகுந்துவிட்டனர். ஒரே இறைவனை வணங்குவதற்கும் அழைப்பதற்கும் அமைக்கப்பட்ட இறை ஆலயத்தில் நூற்றுக்கணக்கில் சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.
இதில் விசித்திரம் என்னெவென்றால் சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காகவே தம் வாழ்நாளெல்லாம் உழைத்த இறைத்தூதர்களான, இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்கும் சிலைகள் தயாரிக்கப்பட்டு விட்டன. நேர்வழியில் நின்ற இப்ராஹீம் (அலை) சந்ததியினர் ‘லாத்’ ‘மனாத்’ ‘ஹூபல்’ ‘நஸ்ர்’ ‘யாகூது’ ‘உஸ்ஸா’ ‘அஸாப்’ ‘நாயிலா’ இப்படி பல பெயர்களில் சிலைகளை வடித்து வணங்கினார்கள். செவ்வாய், புதன், வெள்ளி, சனி இப்படி இன்னும் எந்த எந்தத் கோளங்களை அவர்கள் வணங்கினார்கள் என்றும் தெரியவில்லை. அறியாமை எந்த அளவுக்கு முற்றிப் போயிருந்தது எனில், பேய், பிசாசு, வானவர்கள் இறந்து போன தங்களுடைய பெரியார்கள் ஆகியோரையும் அவர்கள் வணங்கினார்கள்.
அவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டால் பயணத்தில் வணங்குவதற்கு தெய்வச் சிலை இல்லாவிட்டால் கல் ஒன்று கிடைத்தாலும் வணங்க ஆரம்பித்து விடுவார்கள். கல்லும் கிடைக்கவில்லை என்றால் மண்ணைத் தண்ணீரில் குழைத்து உருவம் அமைத்து ஆட்டு பாலைத் தெளித்து வணங்குவார்கள்.
ஹஜ்ஜின் தவறான வடிவங்கள்:
அந்த அஞ்ஞான காலத்தில் ஹஜ்ஜின் கதி எப்படி இருந்தது என்பதை எண்ணிப்பாருங்கள்;! ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு திருவிழா நடைபெற்றது. பல குலத்தவர்கள் தம் இனத்தாரோடு இங்கே வந்து தனித்தனியே முகாம் போடுவார்கள். அவரவர்கள் சார்ந்த கவிஞர்கள் அல்லது துதி பாடர்கள் தம்மிடமும் தம் குலத்தாரிடம் உள்ள பெருமைகளை பாடி பெருமையடித்துக் கொள்வதில் மற்றவர்களை முந்துவார்கள். இறுதியில் அவர்கள் ஒருவரையொருவர் இழித்துரைக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிடும்.
அப்புறம் எவர் தர்மப்பிரபு, எவர் கொடைவள்ளல் என்கிற போட்டி நடக்கும்! குலத்தலைவரும் தமது பெருமையை பறைசாற்ற சமையலில் பெரிய பெரிய அண்டாக்களையும் குண்டாக்களையும் வரிசை வரிசையாக அடுப்புகளில் ஏற்றுவார்கள். ஒருவரையொருவர் மிகைப்பதற்காக ஒட்டகத்திற்கு மேல் ஒட்டகத்தை அறுத்துக்கொண்டே போவார்கள். இந்த வீண் செலவுக்கான நோக்கம் இதுதான். இந்தத் தடவை நடந்த திரு விழாவில் இத்தனை பேருக்கு உணவளித்தார் என்று பிரசாரம் ஆகவேண்டும். இந்தக் கூட்டத்தில் மதுபானம், விபச்சாரம், இசை படுமோசமான செயல்கள் அனைத்தும் தாராளமாக நடந்து கொண்டிருந்தன.
நிர்வாணமாக வலம் வருதல்:
நிர்வாணமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்..!எங்கள் அன்னையர் எங்களை எந்த நிலையில் பெற்றெடுத்தார்களோ அந்த நிலையில்தான் நாங்கள் இறைவன் முன் செல்வோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
இறைவன் பெயரால் பலியும் தியாகச் செயல்களும் கூடச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எப்படியென்றால் பலியிடப்பட்டவற்றின் இரத்ததை கஅபாவின் சுவர்களிலெல்லாம் தடவுவார்கள். மாமிசத்தை வாசலில் பரப்புவார்கள்; இந்த இரத்தமும் மாமிசமும் இறைவனுக்கு தேவை என்ற எண்ணத்தில்!
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹஜ்ஜின் நான்கு மாதங்களை தடுக்கப்பட்டவை என்றும், இந்த மாதங்களில் எந்த விதமான சண்டையும் வம்பும் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்கள். இந்த மக்கள் ஏதோ அந்த ஒன்றை மட்டுமே சிறிதளவு மனத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் மனம் சண்டையிட விரும்பினால் துணிச்சலான சந்தர்ப்பவாதத்தை வைத்துக்கொண்டு, ஓர் ஆண்டில் தடை செய்யப்பட்ட மாதத்தை அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொண்டு, அடுத்த ஆண்டில் அதற்கு ஈடு செய்து கொள்வார்கள். அத்துடன் தமது மார்க்கத்தில் நல்லெண்ணம் கொண்டிருந்த அவர்களில் ஒரு சிலரும் தமது அறியாமையின் காரணத்தினால் நூதனமான புதிய முறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
நூதனமான தடைகள்:
சிலர் வழிச்செலவுக்கு எவ்வித ஏற்பாடும் இல்லாமல் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு மற்றவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே போய்க்கொண்டிருந்தார்கள். இது புண்ணியமான செயல் என்றும் நினைத்தார்கள். தாங்கள் இறைவன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம், எனவே உலகப் பொருள்களை நாங்கள் ஏன் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக ஹஜ் பயணத்தில் வணிகம் செய்வதும், சம்பாதிப்பதற்காக உழைப்பதும் தடுக்கப்பட்டவை என்று கருதிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் உண்ணுவதையும், குடிப்பதையும் துறந்திருந்தார்கள். இதையும் இறை வழிபாடு என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.