அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!-2

Originally posted 2018-02-02 16:43:41.

அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!-2

அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!-2

திருக்குர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயத்தைத் தவிர 113 அத்தியாயங்களும் அளவிலாக்கருணையும் இணையலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்… என்று தான் தொடங்குகின்றன.
இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள், “ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் பாசத்தையும் பரிவையும்விட, இறைவன், தன் அடியார்களிடம் அதிக அன்பும், பாசமும் உடையவனாக இருக்கின்றான்” என்று சொல்கிறார்.
அன்பும் கருணையும் உள்ள இறைவன் நீதி மிக்கவனாகவும் இருக்கின்றான். இதனால், குற்றவாளிகளும், இறைச்சட்டத்தை மீறுபவர்களும் தண்டனை பெறமுடியும், மேலும் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்கள் நற்கூலியையும் வெகுமதிகளையும் பெறமுடியும்.
ஒருபுறம் தமது வாழ்நாள் முழுவதும், இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தவர்கள் இருக்கின்றார்கள். மறுபுறம், இறைச்சட்டத்தை மீறியும், பிற மனிதர்களை சுரண்டி கொடுமை இழைத்தும் வாழ்ந்தவர்கள் இருக்கின்றார்கள். இந்த இரு வகையினரும், ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்களா என்ன? இல்லையே..!
இருவரும் சமமான முறையில் இறைவனிடம் நடத்தப்பட்டால், திண்ணமாக, மனிதன் தன்னுடைய செயல்களுக்கு இறைவனிடம் கணக்கு கொடுக்க வேண்டும் எனும் மறுமை கோட்பாடு தேவையில்லாத-கவைக்குதவாத ஒன்றாக ஆகிவிடும் அல்லவா..?
மறுமை நாள் (தமது செயல்களுக்கு ஏற்ப மரணத்திற்குப் பின்பு கூலி வழங்கப்படும் நாள்) தீர்ப்பு நாள் என்ற ஒன்று இல்லை என்றால் இந்த உலகத்தில் ஒழுக்கமும், சட்டமும் சீர்கெட்டு அமைதியின்மையே மேலோங்கும்.
இதைத் திருக்குர்ஆன்,
திண்ணமாக இறையச்சமுடைய மனிதர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் அருள்நிறைந்த சுவனங்கள் இருக்கின்றன. கீழ்ப்படிபவர்களின் நிலையை குற்றவாளிகளின் நிலைபோன்று நாம் செய்துவிடுவோமா, என்ன?உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்கின்றீர்கள்?(68:34-36)
என்று வருணிக்கின்றது.
இறைவனை, மனிதப்பண்புகளில் உருவகப்படுத்தி அடைப்பதை இஸ்லாம் தடை செய்கின்றது. மேலும் ஒரு சில தனிநபர்கள், அவர்களுடைய இனத்தாலோ, செல்வத்தாலோ, இன-நாட்டின் அடிப்படையிலோ இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்று சித்தரிப்பதையும் இஸ்லாம் தடை செய்கின்றது.

Related Post