நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!

ஏகத்துவமே மகத்துவம்..! நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!

ஏகத்துவமே மகத்துவம்..! நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!

(இதற்கு முன்னர்) நூஹ் நம்மை அழைத்திருக்கின்றார்; அப்போது எத்துணைச் சிறந்த முறையில் அவருக்கு நாம் பதிலளித்தோம் (என்பதைப் பாருங்கள்). அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக்கொண்டோம். இன்னும் அவருடைய சந்ததிகளையே நிலைத்திருக்கும்படிச் செய்தோம். மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம். சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்!
ஏகத்துவமே மகத்துவம்..! நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!
அல்லாஹ் கூறுகின்றான்:
“எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்”(அல்-குர்ஆன் 6:82)
மேற்கண்ட இறைவசனத்திற்கு விளக்கமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
‘இறைநம்பிக்கைகொண்டு (பின்னர்) தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்’ என்னும் (திருக்குர்ஆன் 6:82) வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. எனவே, அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் யார்?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல! அது இணைவைப்பையே குறிக்கிறது. ‘என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. நிச்சயமாக, இணை வைப்பு மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறதே, (திருக்குர்ஆன் 31:13) அதை) நீங்கள் கேட்க வில்லையா?’ என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
மேற்கூறப்பட்ட இறைவசனத்தில் (6:82), ஏக இறைவனின் மீது ஈமான் கொண்டு, தங்களுடைய ஈமானில், இறை நம்பிக்கையில் யாதொரு இணைவைப்பு என்ற அநீதியைக் கலக்காமல் அவனையே வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு சுபசெய்தி கூறப்பட்டுள்ளது. மாபெரும் அநீதியாகிய இணைவைப்பு என்பதிலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களுக்கு நேர்வழியும், மறுமையில் இறைவனின் தண்டணையிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
ஈமானில் உயர்வானது ஏகத்துவமே!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான – அல்லது – அறுபதுக்கும் அதிகமான உட்பிரிவுகளைக் கொண்டதாகும். அவற்றில் மிக உயர்ந்தது, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறில்லை என்ற கூற்றாகும். அவற்றில் ஆகத் தாழ்ந்தது, நடைபாதையில் கிடக்கும் (முள் போன்ற) தொல்லை தருவதைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு பிரிவே” அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (ஆதாரம் : முஸ்லிம்)
ஏகத்துவவாதிகளுக்கு சுவர்க்கம்!
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று (மனமார) அறிந்த நிலையில் இறந்து விடுபவர் சொர்க்கம் செல்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி). (ஆதாரம் : முஸ்லிம்)
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறில்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரு உறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம் கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல் இருக்க மாட்டார்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (ஆதாரம் : முஸ்லிம்)
“அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் (மரணித்து) அவனை (மறுமையில்) சந்திப்பவர் சொர்க்கம் செல்வார்; அவனுக்கு இணை வைத்தவராக அவனைச் சந்திப்பவர் நரகம் செல்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி); புகாரி)
லாஇலாஹ இல்லல்லாஹ்என்று மனதார கூறியவர் சொர்க்கம் செல்வார்:
‘யார் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுகிறாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் ஹராமாக்கி விடுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை என்று கூறிய அதே வாயினால், அவுலியாக்களையும், இறை நேசர்களையும் அழைத்து, அவர்களிடம் உதவி தேடி அவர்களைப் பிரார்த்திப்பதன் மூலம் அவர்களையும் வேறு ‘இலாஹ்களாக’ ஆக்கிக்கொள்ளாமல் அல்லாஹ்விடமே அழைத்தல், பிரார்த்தனைகள், உதவி தேடுதல், மன்றாடுதல், நேர்ச்சை செய்தல், குர்பானி கொடுத்தல் போன்ற அனைத்துவிதமான வணங்கங்களையும் செய்கின்றவர் தான் உண்மையிலேயே ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பதன் பொருளை உணர்ந்தவராவார்.
ஏகத்துவத்தின் மகத்துவம்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் கூறுகிறான்: மனிதனே! நீ பூமியின் அளவு பிழைகளைச் செய்து, எனக்கு இணை வைக்காமல் நீ என்னைச் சந்தித்தாலும் நான் உனக்கு பூமியின் அளவு மன்னிப்புத்தந்து உன்னை மன்னிப்பேன்’ (ஆதாரம் : திர்மிதி)
ஒருவர் பூமியின் அளவிற்கு பாவம் செய்வது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று! ஆனால் அந்த அளவிற்கு ஒருவன் பாவங்கள் செய்திருப்பினும் அவற்றையாவும் மன்னித்துவிடுவதாக அல்லாஹ் கூறுகின்றான் ஒரே ஒரு நிபந்தனையின் பேரில்! அது தான் இறைவனுக்கு இணை கற்பிக்காமல் ஏகத்துவத்தில் உறுதியாக இருக்கின்ற தன்மை! இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால், இறைவனுக்கு இணை கற்பிப்பது என்பது பூமியின் அளவு பாவங்களை விட மகாகொடியது என்பதை அறியலாம்.
அல்லாஹ் நம்மனைவர்களுக்கும் நேர்வழியைக்காட்டி, ஏகத்துவத்தில் உறுதிமிக்கவர்களாக இவ்வுலகில் வாழச்செய்து மறுமையில் நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவன் ஏகத்துவத்தைப் பேணி நடப்பவர்களுக்காக வாக்களித்த சுவர்க்கத்திற்கு உரியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாகவும். ஆமீன்

Related Post